நியமன கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை பூர்த்தி

Hits: 0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சமான எதிர்கால நோக்கில் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கு நியமனக் கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.

தொழிலுக்காக விண்ணப்பித்தோர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை அல்லது அதற்கு சமமான டிப்ளோமாவை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் பெற்றிருப்பது அவசியமாகும். தொழில் கோரி அனுப்பப்பட்டசுமார் 70 ஆயிரம் விண்ணப்பபடிவங்களில் 56 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே முறையாகப் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன. இவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. இதன்படி தகைமைகள் யாவும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட 45,585 விண்ணப்பதாரிகளுக்கே தொழில் வழங்கப்படவுள்ளன.  சகல மாவட்டங்களையும் சேர்ந்த விண்ணப்பதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (02) மாலையளவில் தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இலங்கை வரலாற்றிலேயே ஆகக்கூடிய நியமனக் கடிதங்கள் எவ்வித வைபவங்களுமன்றி பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும். நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெற்று இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

பொது நிருவாக அமைச்சின் செயலாளரே இந்நியமனக் கடிதங்களுக்கு பொறுப்பாளராகவுள்ளார்.

நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்று 03 நாட்களுக்குள் பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டியதுடன் கடிதம் கிடைக்கப்பெற்று ஏழு நாட்களுக்குள் பயிற்சிக்கு சமூகமளிக்காவிடின் அந்நியமனம் ரத்தாகிவிடுமென்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஒரு வருட பயிற்சிக் காலத்தின்போது மாதாந்தம் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் அதேநேரம் பயிற்சிக்குப் பின்னர் அதே மாவட்டத்தில் தொடர்ந்து 05 வருடங்களுக்கு வேலை பெற்றுக் கொடுக்கப்படும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து 110 நாட்கள் நிறைவடைவதற்குள் இதுபோன்ற பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமைக்காக ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் மக்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

2019 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமனான டிப்ளோமாவை முடித்த 45 வயது வரையானவர்களுக்கே இத்தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!